கரூர் மாவட்டத்தில், மது விற்ற 77 பேர் கைது
கரூர் மாவட்டத்தில், மது விற்ற 77 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளில் மதுபானங்கள் விற்பனைக்கு அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுப்படி கரூர் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டி போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கண்காணிப்பில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கரூர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் நேற்று மட்டும் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 77 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 2,641 மதுபாட்டில்களும், ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக தென்னிலை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட, வால்நாய்க்கன்பட்டியில் 3 பேரிடமிருந்து 1,216 மதுபாட்டில்களும், ஓரு காரும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரசு உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரித்துள்ளார். மேலும் சட்டவிரோத மதுவிற்பனை பற்றி பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக எண்ணிற்கு (04324-296299) தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.