8 படகுகள் தீயில் எரிந்து நாசம்
மிடாலம் கடற்கரையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 படகுகள் தீயில் எரிந்து நாசமானது.
கருங்கல்:
மிடாலம் கடற்கரையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 படகுகள் தீயில் எரிந்து நாசமானது.
தீ விபத்து
கருங்கல் அருகே உள்ள மிடாலம் கடற்கரையில் 10 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று அந்த பகுதியில் காய்ந்த குப்பைகளில் தீ பிடித்தது. இந்த தீ மள...மள...வென எரிந்து அருகில் நிறுத்தி இருந்த படகுகளில் பரவியது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ அடுத்தடுத்த படகுகளில் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் கடும் புகைமூட்டமாக காணப்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் ெகாடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் அங்கு நின்ற 8 படகுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. 2 படகுகள் மீட்கப்பட்டன.
போலீசார் விசாரணை
இதுகுறித்து மீனவர்கள் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.