பணியின்போது உயிரிழந்த 13 அரசு டாக்டர்களின் குடும்பத்தினருக்கு ரூ.8½ கோடி நிதியுதவி
பணியின்போது உயிரிழந்த 13 அரசு டாக்டர்களின் குடும்பத்தினருக்கு ரூ.8½ கோடி நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் பணியின்போது உயிர் இழந்த 13 அரசு டாக்டர்களின் வாரிசுதாரர்களுக்கு டாக்டர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியில் இருந்து 8 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசுப் பணியில் பணிபுரிந்து வரும் டாக்டர்கள் எதிர்பாராத வகையில் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு 50 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கிட டாக்டர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதி ஏற்படுத்தப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், ஒவ்வொரு டாக்டரும் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த நிதியத்தில் சேர்ந்து பங்களிப்பாக 2020-2021-ம் ஆண்டில் தலா ரூ.6 ஆயிரம் மொத்தமாக செலுத்தினர்.
ரூ.8½ கோடி நிதியுதவி
இந்த டாக்டர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியில் இருந்து பணியின்போது உயிரிழக்கும் அரசு டாக்டர்களுக்கு 1 கோடி ரூபாய் நிதி வழங்கிட 12.10.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, மார்ச் 2022-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் ரூ.500 ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த திட்டத்தில் 9 ஆயிரத்து 907 டாக்டர்கள் விருப்பம் தெரிவித்து அதன் அடிப்படையில் சந்தா செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், டாக்டர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியில் இருந்து 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பணியின்போது உயிர் இழந்த 9 டாக்டர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும், 2022-ம் ஆண்டு பணியின்போது உயிரிழந்த 4 டாக்டர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 1 கோடி ரூபாய்க்கான காசோலைகளும், என மொத்தம் 8½ கோடி ரூபாய்க்கான காசோலைகளை உயிர் இழந்த 13 டாக்டர்களின் வாரிசுதாரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் சாந்திமலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் டாக்டர் ஏ.சண்முககனி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்) இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.