விதிகளை மீறிய 8 உரக்கடைகளின் உரிமம் ரத்து
தூத்துக்குடி மாவட்டத்தில் விதிகளை மீறிய 8 உரக்கடைகளின் உரிமங்களை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விதிகளை மீறிய 8 உரக்கடைகளின் உரிமங்களை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
உரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரங்களில் ராபி பருவத்தில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பயறுவகைகள், எண்ணை வித்துக்கள் மற்றும் பருத்தி ஆகிய பயிர்கள் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. தற்போது பெய்யும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். மானாவாரி பயிர்சாகுபடிக்கு தேவையான உரங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உரிமம் ரத்து
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் உரக்கடைகளில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன்படி விதிகளை மீறிய 8 உரக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு அதன் விற்பனை முனையக் கருவிகள் வேளாண்மை இயக்குநரகத்தால் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
புகார்
விவசாயிகள் தங்கள் தேவைக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தனியார் உரக்கடைகளிலோ உரமூடைகளில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை வாங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உரங்களை அதிக விலைக்கு விற்றல், இணைப்பொருட்களை வாங்க கட்டாயபடுத்துதல், வெளிமாவட்டங்களில் இருந்து வந்து போலி உரங்களை விற்றல் போன்ற புகார்களுக்கு விவசாயிகள் கயத்தார் (9080767716), கோவில்பட்டி (7092193209), ஓட்டப்பிடாரம் (9786301904), விளாத்திகுளம் (7708575642), புதூர் (8300159451), தூத்துக்குடி (8056764148), செய்துங்கநல்லூர் (9566334247), ஸ்ரீவைகுண்டம் (9894987290), ஆழ்வார்திருநகரி (9629582564), திருச்செந்தூர், உடன்குடி (9003896396) மற்றும் சாத்தான்குளம் (9159041865) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். மாவட்ட அளவில் உரங்கள் தொடர்பான புகார்களை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், தூத்துக்குடி (0461-2340678) மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு, தூத்துக்குடி (9655429829) என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.