எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு
x

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வன் (வயது 37) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், தமிழ்ச்செல்வன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மகன் விஜி (28), அஞ்சப்பன் மகன் தினேஷ் (26), குருநாதன் மகன் ரஞ்சித் (27), சாமிநாதன் மகன் பக்கிரிச்சாமி (45), மருதையா மகன் கார்த்திக் (27) ஆகிய 6 பேரும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

விசைப்படகு பழுது

இவர்கள் 32 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களது விசைப்படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனே அதனருகே மற்றொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 4 பேரில், சிவக்குமார் மகன் கமல் (25), சுருளி மகன் புனுது (41) ஆகிய 2 பேரும் பழுதாகி நின்ற தமிழ்ச்செல்வன் படகில் ஏறி பழுதினை சரி செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மற்ற 2 பேரும் அவர்கள் வந்த படகில் அங்கிருந்து சென்று விட்டனர்.

8 மீனவர்கள் கைது

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் 8 பேருடன் பழுதடைந்த படகையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story