அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்
அரசு பஸ்சில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை காட்பாடி சோதனைச் சாவடியில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரசு பஸ்சில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை காட்பாடி சோதனைச் சாவடியில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரசு பஸ்சில் சோதனை
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மாநில எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக -ஆந்திர எல்லைப் பகுதியான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் காட்பாடி சப்-இன்ஸ்பெக்டர் பால வெங்கட்ராமன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருப்பதியில் இருந்து வேலூருக்கு வந்த அரசு பஸ்சில் சோதனை நடத்தினர். பஸ்சில் சந்தேகப்படும் வகையில் பையுடன் அமர்ந்திருந்த வாலிபரிடம் சோதனை நடத்தினர்.
8 கிலோ கஞ்சா பறிமுதல்
அந்த பையில் 4 பண்டல்களில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருப்பூரை சேர்ந்த கார்த்திக் என்பதும் அவர் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை கடத்தி வந்த கார்த்திகை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.