கார் கவிழ்ந்து 8 பேர் படுகாயம்
திருவாடானை அருகே கார் கவிழ்ந்து 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
தொண்டி,
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அவர்களுக்கு சொந்தமான காரில் குடும்பத்துடன் ராமேசுவரம் சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது திருவாடானை அருகே உள்ள பெரிய கீரமங்கலம் கிராமம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் இருந்த 7 அடி பள்ளத்தில் உருண்டு தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து திருவாடானை தீயணைப்பு நிலை அலுவலர் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவத்திற்கு சென்று இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை மீட்டு திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதில் ஜெயா (வயது 34), தர்ஷினி (15), எக் ஷித் (4) சத்யா (28), ராகுல் (31), சுரேஷ் (44), பாலமுருகன் (33), மற்றும் 10 மாத குழந்தை ஆதினி, ஆகிய 8 பேரும் காயமடைந்தனர். இதில் எக் ஷித் வயது 4 என்ற குழந்தைக்கு கைமுறிவு ஏற்பட்டது. 2 பெண்களுக்கு தலையில் பலத்த காயத்துடனும் மற்றவர்கள் லேசான காயத்துடனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.