மரத்தின் மீது வேன் மோதியதில் 8 பேர் படுகாயம்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரத்தின் மீது வேன் மோதியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
குன்னூர்,
திருப்பூரை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் தனது குடும்பத்தினர் உள்பட 9 பேருடன், குன்னூர் அருகே உள்ள காந்திபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக நேற்று வேனில் வந்திருந்தனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் திருப்பூருக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை முருகானந்தம் ஓட்டினார். குரும்பாடி அருகே வேன் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த வேன் மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மரம் சாய்ந்து அருகே இருந்த மின் கம்பிகள் மற்றும் வேன் மீது விழுந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனால் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.