6 சிறுமிகள் உள்பட 8 பேர் மீட்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல் போன 6 சிறுமிகள் உள்பட 8 பேர் மீட்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் காணாமல் போன சிறுவர், சிறுமிகள் கண்டுபிடிக்கும்படி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மாவட்டந்தோறும் தனிப்படைகள் அமைத்து காணாமல் போன சிறுவர்கள், சிறுமிகளை கண்டுபிடிக்கும் பணி நடக்கிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல் போன சிறுவர், சிறுமிகளை கண்டுபிடிக்கும் படி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். இதன் எதிெராலியாக குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து காணாமல் போன சிறுவர், சிறுமிகளை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் சிறுவர்- சிறுமிகள் காணாமல் போன வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
மேலும் சம்பந்தப்பட்ட சிறுவர்- சிறுமிகளின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த 2 சிறுவர்கள், 6 சிறுமிகளின் இருப்பிடம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 8 பேரையும் தனிப்படை போலீசார் மீட்டனர். இவர்களுக்கு தக்க அறிவுரைகள் கூறப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து காணாமல் போன மேலும் சில சிறுவர், சிறுமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.