எடப்பாடியில் துணிகரம்: அரசு ஊழியர் வீட்டில் 8½ பவுன் நகை திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
எடப்பாடியில் அரசு ஊழியர் வீட்டில் 8½ பவுன் நகை திருடப்பட்டது. இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
எடப்பாடி:
அரசு ஊழியர் வீட்டில் திருட்டு
எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட சின்னமணலி நடுத்தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர் சென்னையில் தங்கி இருந்து வருவாய்த்துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர் தனது மாமனார் ரத்தினவேலு, மாமியார் நீலா ஆகியோருடன் எடப்பாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாப்பாத்தி தனது பெற்றோர் வீடான கும்பகோணத்திற்கு சென்றார். ரத்தினவேலு, நீலா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கு பீரோவில் வைத்திருந்த 8½ பவுன் நகைகள், வெள்ளி சங்கிலி ஆகியவற்றை திருடி சென்றனர்.
2 பீரோக்கள் உடைப்பு
இந்தநிலையில் நேற்று காலை அக்கம் பக்கத்தினர் சங்கரநாராயணனின் வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுதொடர்பாக எடப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
செல்போன் மூலம் சங்கரநாராயணனை போலீசார் தொடர்பு கொண்டு திருட்டு குறித்து தெரிவித்தனர். அவர் வீட்டில் 8½ பவுன் நகைகள் மற்றும் வெள்ளி சங்கிலி வைத்திருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்திய போலீசார், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் 2 பேர், சங்கரநாராயணன் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், ஒரு மணி நேரத்துக்கு பிறகு அவர்கள் திரும்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரசு ஊழியர் வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.