மாணவ-மாணவிகளுக்கு வழங்க 8 ஆயிரம் சைக்கிள்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 8 ஆயிரம் சைக்கிள்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டதும், சைக்கிள்களை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,983 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நாளையும் (திங்கட்கிழமை), 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 14-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக அந்தந்த பள்ளிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சைக்கிள்கள் பயன்படுத்தும் வகையில் இல்லாமல் உதிரி பாகங்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் உதிரி பாகங்களை இணைத்து சைக்கிள்களாக மாற்றி மாணவ-மாணவிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.
8 ஆயிரம் சைக்கிள்கள்
அதன்படி திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேற்று சைக்கிள் உதிரிபாகங்கள் கொண்டுவரப்பட்டு பள்ளி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கும் சைக்கிள்களின் உதிரிபாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டம் முழுவதும் செயல்படும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதற்கட்டமாக 8 ஆயிரம் சைக்கிள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் இந்த உதிரிபாகங்கள் இணைக்கப்பட்டு சைக்கிள்களாக மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். அதன் பின்னர் தேவைக்கேற்ப பள்ளிகளுக்கு சைக்கிள்கள் அனுப்பி வைக்கப்படும் என்றனர்.