தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.80 கோடியில் மேம்பாலம்
அரகண்டநல்லூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.80 கோடியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரி தெரிவித்தார்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூரையும், அரகண்டநல்லூரையும் இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது. தரைப்பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் அது உறுதி தன்மையை இழந்து காணப்படுகிறது. தற்போது அந்த பாலம் சேதமடைந்து போக்குவரத்திற்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் பழுது பார்க்கும் பணி செய்ய பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
விவசாயிகள் பாதிப்பு
குறிப்பாக அரகண்டநல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இந்த தரைப்பாலம் மிக முக்கிய பங்காற்றியது. தற்போது தரைப்பாலம் பழுதடைந்துள்ளதால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பள்ளி கல்லூரி செல்லும் வாகனங்களும், பாதசாரிகளும் இந்த தரைப்பாலத்தையே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அனைவருக்கும் மிகவும் சிரமமாக உள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.80 கோடியில் மேம்பாலம்
எனவே தரைப்பாலம் உள்ள இடத்தில் புதிய மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை மண் ஆய்வு செய்தது. இதன் தொடர்ச்சியாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.80 கோடியில் புதிய மேம்பாலம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே நெடுஞ்சாலை துறையினர் அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புதியதாக அமைய உள்ள பாலம் 11 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளதாகவும், அதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், மேலும் அரகண்டநல்லூரில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.