80 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
நெல்லையில் கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் 80 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் கழிவு நீர் ஓடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் தேங்கி ஓடைகளை அடைத்து விடுகின்றன. இதுசம்பந்தமாக மாநகராட்சி ஆணையாளருக்கு அடிக்கடி புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் தச்சநல்லூர் மண்டல சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் மேற்பார்வையாளர்கள் வேல்முருகன், இளஞ்செழியன், சந்துரு, பாலாஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள 60 கடைகளில் ஆய்வு நடத்தினர். அதில் சுமார் 80 கிலோ அளவுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று மட்டும் சம்பந்தப்பட்ட அனைத்து கடைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) முதல் கடுமையான அபராதம் விதிக்கப்படும். இந்த பணியானது தொடர்ந்து மாநகராட்சி முழுவதும் நடைபெறும் என ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.