4 பேரிடம் ரூ.80¼ லட்சம் மோசடி


4 பேரிடம் ரூ.80¼ லட்சம் மோசடி
x

திட்டக்குடியில், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி 4 பேரிடம் ரூ.80¼ லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 47). விவசாயி. இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் புகார் மனு அளித்தார். அதில், எங்கள் ஊரை சேர்ந்த ஐயம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ரோடு ரோஸ்நகர் செல்வன் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (55) என்பவர் எனக்கு கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகமானார். என்னை போல எங்கள் ஊரில் உள்ள பலருக்கும் அவர் நன்கு தெரிந்தவர்.

அவர் எங்களிடம், நான் பல பேரிடம் இருந்து பணத்தை பெற்று பல கோடி ரூபாயை பெரிய நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளேன். இந்த தொழிலில் நல்ல லாபம் கிடைக்கிறது. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய மேலும் பணம் தேவைப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்தால், அந்த பணத்தை 6 மாதத்தில் இரட்டிப்பாக தருவேன் என்று கூறினார். அவ்வாறு இரட்டிப்பாக தரும் போது, எனக்கு 10 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்றும் கூறினார்.

மோசடி

இதை நம்பி நான் 25.4.2020 அன்று ராமநத்தத்தில் வைத்து ரவிச்சந்திரன், அவரது மனைவி கற்பகம் (47) ஆகிய 2 பேரிடமும் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமாகவும் மொத்தம் ரூ.20 லட்சம் கொடுத்தேன். இதேபோல் ராமநத்தம் ஐயம்பெருமாளிடம் ரூ.10 லட்சம், தச்சூரை சேர்ந்த சீதாராமனிடம் ரூ.20 லட்சத்து 37 ஆயிரத்து 900, ராமநத்தம் ராஜூ கண்ணனிடம் ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சத்து 37 ஆயிரத்து 900 பெற்றுக்கொண்டனர். ஆனால் அவர்கள், கூறியபடி பணத்தை தராமல் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றி விட்டனர்.

ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், இது பற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் அமலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

இந்நிலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்ற ரவிச்சந்திரன், வீட்டில் இருந்த அவரது மனைவி கற்பகம் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 2 பேரும் மோசடி செய்ததை ஏற்றுக்கொண்டனர். பணத்தை குடும்ப செலவுக்காகவும், ஆடம்பரமாக செலவு செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் திட்டக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story