80 சதவீத பட்டாசு ஆலைகள் இயங்கவில்லை


80 சதவீத பட்டாசு ஆலைகள் இயங்கவில்லை
x

அடுத்தடுத்த வெடி விபத்துகளால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 80 சதவீத பட்டாசு ஆலைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

விருதுநகர்

சிவகாசி,

அடுத்தடுத்த வெடி விபத்துகளால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 80 சதவீத பட்டாசு ஆலைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

2 இடங்களில் வெடி விபத்து

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட செங்கமலப்பட்டி, கணஞ்சாம்பட்டி ஆகிய இடங்களில் இயங்கி வந்த பட்டாசு ஆலைகளில் நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்டு 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

15-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலைகள் விபத்து இல்லாமல் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்றும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆலைகள் இயங்கவில்லை

இதனைதொடர்ந்து நேற்று விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தாலுகா பகுதியில் உள்ள பெரும்பாலான பட்டாசு ஆலைகள் இயங்க வில்லை. இதுகுறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் பணிக்கு வரவில்லை.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் பலர் தங்களது ஆலையில் இருந்த பாதுகாப்பு குறைகளை சரி செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பட்டாசு ஆலைகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் பல பிரிவுகளாக பட்டாசு ஆலைகளுக்கு சென்றபோது பெரும்பாலான பட்டாசு ஆலைகள் மூடி இருந்ததாக கூறப்படுகிறது.

சிவகாசி வெடி விபத்தை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 8 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழுவில் வருவாய்த்துறை, போலீஸ், தீயணைப்புத்துறை, தொழில்துறையை சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

80 சதவீதம்

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஒரே நாளில் இரண்டு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்து தொழிலாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் தங்களது தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சரி செய்து கொள்ள நேற்று வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் கலந்து கொண்டு தங்களது பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்திக்கொண்டன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story