3 சென்ட் இடத்தை எழுதி தருமாறு தினமும் சித்ரவதை: மகனை சுத்தியலால் அடித்து கொன்ற 81 வயது முதியவர்-2 கி.மீ. தூரம் நடந்து சென்று போலீசில் சரண்
கெங்கவல்லி அருகே 3 சென்ட் இடத்தை எழுதி தருமாறு தினமும் சித்ரவதை செய்ததால் ஆத்திரம் அடைந்த 81 வயது முதியவர், மகனை சுத்தியலால் அடித்துக் கொன்றார். 2 கி.மீ. தூரம் நடந்து சென்று போலீசில் சரண் அடைந்தார்.
கெங்கவல்லி:
இந்த பயங்கர கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நிலப்பிரச்சினை
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி பள்ளக்காடு நடுவீதியில் வசிப்பவர் வையாபுரி (வயது81). இவருடைய மகன் துரைராஜ் (60). வையாபுரி, தன்னுடைய மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். தந்தைக்கும், மகனுக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் துரைராஜ் மனைவி மல்லிகா, தன்னுடைய மகன், மருமகளுடன் தலைவாசல் அருகே உள்ள காமக்காபாளையம் கோவில் நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளனர்.
சுத்தியலால் அடித்துக் கொலை
வீட்டில் வையாபுரி மட்டும் தனியாக இருந்துள்ளார். இரவு துரைராஜ் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. அப்போது நிலப்பிரச்சினை தொடர்பாக தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அவரை துரைராஜ் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு அங்குள்ள மாட்டு கொட்டகையில் உள்ள கட்டிலில் படுத்து துரைராஜ் தூங்கி உள்ளார்.
அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வையாபுரி, தூங்கிக் கொண்டிருந்த மகனின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துரைராஜ் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
போலீசில் சரண்
மகனை கொன்று விட்டோமே என்ற வேதனை ஒருபுறம் இருந்தாலும், கொலைசெய்து விட்டோமே என்ற எண்ணமும் வையாபுரிக்கு ஏற்பட்டுள்ளது. உடனே போலீசில் சரண் அடைய முடிவு செய்தார். அதன்படி அதிகாலையிலேயே பள்ளக்காடு பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். பஸ்கள் எதுவும் வராததால் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெங்கவல்லி போலீஸ் நிலையத்துக்கு நடந்தே சென்றார்.
அதிகாலை 4 மணி அளவில் போலீஸ் நிலையத்துக்கு பரபரப்புடன் வந்த முதியவரை கண்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை அமர வைத்து விசாரித்தனர். அப்போது அவர், நடந்த விவரங்களை போலீசாரிடம் கூறினார். உடனே போலீசார் கொலை நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர்.
3 சென்ட் இடம்
துரைராஜ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்ட போலீசார், கொலைக்கு பயன்படுத்திய சுத்தியலை மீட்டனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக வையாபுரி போலீசில் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
எனக்கு 81 வயதாகிறது. என்னுடைய மகன் துரைராஜ் வீட்டில் தரும் சாப்பாட்டை சாப்பிட்டு வாழ்ந்து வந்தேன். எனது பெயரில் 3 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை எழுதி தருமாறு துரைராஜ் என்னிடம் கேட்டு வந்தான்.
தினமும் சித்ரவதை
நான் இறந்த பிறகு அந்த இடம் உனக்கே வந்து விடும் என்று கூறி வந்தேன். அப்படி இருந்தும் தினமும் மது குடித்து விட்டு வந்து என்னை தாக்கி சித்ரவதை செய்து வந்தான். அவனது கொடுமையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நேற்று (நேற்று முன்தினம்) இரவு என்னை சரமாரியாக தாக்கி விட்டு மதுபோதையில் அவன் தூங்கி விட்டான்.
விடிய விடிய தூக்கம் இல்லாமல் கண்ணீருடன் நான் தவித்தேன். எனவே அவன் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து அவனது தலையில் அடித்து கொலை செய்து விட்டேன் என்று கண்ணீருடன் வையாபுரி போலீசில் கூறியுள்ளார்.
கெங்கவல்லி அருகே 3 சென்ட் நிலப்பிரச்சினையில் 60 வயது மகனை சுத்தியலால் அடித்துக் கொன்ற 81 வயது முதியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.