வாடிவாசலில் இருந்து 816 காளைகள் சீறிப்பாய்ந்தன


வாடிவாசலில் இருந்து 816 காளைகள் சீறிப்பாய்ந்தன
x

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து 816 காளைகள் சீறிப்பாய்ந்தன. 16 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே க.புதுப்பட்டியில் பெரியகருப்பர் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 300 வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் துள்ளிக்குதித்து ஓடியது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 816 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

16 பேர் காயம்

காளைகள் முட்டியதில் வீரர்கள் 11 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 3 பேர், பார்வையாளர்கள் 2 பேர் என மொத்தம் 16 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், கட்டில், பீரோ, டைனிங் டேபிள், சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி, மிக்சி, குக்கர், கிரைண்டர், தங்க நாணயம், ரொக்கம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த திரளானவர்கள் கண்டு களித்தனர். பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story