சேலத்தில் 821 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சேலத்தில் 821 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்,
பிளாஸ்டிக் பொருட்கள்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முழுவதுமாக தடுக்க மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் நேற்று மாநகர நல அலுவலர் யோகானந், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் ஆகியோர் தலைமையில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
821 கிலோ பறிமுதல்
அப்போது, பல்வேறு வணிக கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை ஆகிய மண்டலங்களில் 821 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறிந்து அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.31 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சோதனை தினமும் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.