84 இடங்கள் பேரிடர் பகுதிகளாக அறிவிப்பு
குன்னூரில் 84 இடங்கள் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்று சப்-கலெக்டர் தெரிவித்தார்.
குன்னூர்,
குன்னூரில் 84 இடங்கள் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்று சப்-கலெக்டர் தெரிவித்தார்.
பருவமழை தீவிரம்
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பருவமழை காலங்களில் மண்சரிவு, மரங்கள் விழுதல் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக குன்னூரில் மழை தீவிரமடைந்து உள்ளது. நேற்று குன்னூர் நகரில் காலை முதலே மழை பெய்தது. சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால், கடும் குளிர் நிலவியது. இதனால் வேலைக்கு செல்கிறவர்கள் பாதிக்கப்பட்டனர். குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் முன்னால் சென்ற வாகனங்கள் தெரியவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தால் பேரிடர்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதையடுத்து பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் குன்னூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி தலைமை தாங்கி பேசும்போது:-
84 இடங்கள்
குன்னூர் பகுதியில் 84 இடங்கள் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் பருவமழையால் ஏற்படும் மண்சரிவு, வெள்ளம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பேரிடரில் சிக்கியவர்களை உடனடியாக மீட்பது மற்றும் தகவல்கள் அளிக்க குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்.
மழையால் பாதிக்கப்படுவர்களை தங்க வைக்க நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். மழைக்கால முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் தீயணைப்பு துறை, காவல்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தநிலையில் நேற்று ஊட்டியிலும் பரவலாக மழை பெய்தது. சுற்றுலா பயணிகள் குடைகளை பிடித்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.