போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 85 பேர் கைது
சாத்தப்பாடி கிராமத்தினர் மீது நடந்த தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 85 பேர் கைது செய்யப்பட்டனர்.
புவனகிரி
புவனகிரி அருகே சாத்தப்பாடி கிராமத்தில் உள்ள சாலக்கரை மாரியம்மனுக்கு கடந்த, 7-ந்தேதி கிள்ளை கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து சாத்தப்பாடி கிராமத்துக்கு சாமி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மேலமணக்குடியில் வந்தபோது சாமியுடன் ஊர்வலமாக வந்தவர்கள் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதை மேலமணக்குடி கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் தட்டிக்கேட்டனர். இதனால் இருபிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. இது தொடர்பாக இருதரப்பு புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாத்தப்பாடியை சேர்ந்தவர்கள் மீது, நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நிர்வாகிகள் மணிவாசகம், சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த நிலையில் அங்கு வந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று தொிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.