பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டில் காளைகள் பந்தாடியதில் 86 பேர் காயம்
உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் வீரர்களை காளைகள் பந்தாடியதில் 86 பேர் காயம் அடைந்தனர். போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரை வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் வல்லடிகார சுவாமி, ஏழைகாத்தம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அதன்படி பல்லவராயன்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டு, தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டு இருந்தன.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர். இதேபோல் 4 ஆயிரம் காளைகளின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் கணினி குலுக்கல் முறையில் 700 காளைகள் தேர்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதிபெற்ற 700 காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. அவை தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுரை, திண்டுக்கல், நெல்லை, சிவகங்கை, திருச்சி, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அழைத்து வரப்பட்டன.
பந்தாடிய காளைகள்
அதுபோல் ஆன்லைன் மூலம் பெயர் பதிவு செய்த மாடுபிடி வீரர்கள் 350 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. வீரர்கள் பல குழுக்களாக பிரித்து, 1 மணி நேரத்துக்கு ஒரு குழுவினர் வீதம் மாடுகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த பின்னரே அனுமதித்தனர். வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை சான்று, தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை பரிசோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.
காலை 7 மணியளவில் இந்த ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து, விழா குழுவினர் மற்றும் மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பின்னர், வாடிவாசலில் இருந்து கம்பீரமாக வெளியே வந்த காளைகளின் மீது மாடுபிடி வீரர்கள் பாய்ந்து சென்று அவற்றை பிடிக்க முயன்றனர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் களத்தில் நின்று விளையாடி வீரர்களை பந்தாடியது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்தது.
86 பேர் காயம்
இந்த ஜல்லிக்கட்டில் காளைகளிடம் சிக்கி 73 மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் 13 பேர் என மொத்தம் 86 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், படுகாயம் அடைந்த மாடுபிடி வீரர்களான எரசக்கநாயக்கனூரை சேர்ந்த பார்த்திபன் (வயது 23), தேனியை சேர்ந்த சரவணன் (26), சின்னமனூரை சேர்ந்த கவுசிக் (25) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதல் பரிசு கார்
ஜல்லிக்கட்டில் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகளுக்கான பரிசுகளை அவற்றின் உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
அதில் அதிக காளைகளை பிடிக்கும் வீரருக்கு காரும், 2-வது இடம் பிடிக்கும் வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் 18 மாடுகளை பிடித்து முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.காம். பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதுபோல், மதுரை குருவித்துறையை சேர்ந்த மற்றொரு கார்த்திக் 13 காளைகளை பிடித்து 2-வது இடம் பிடித்தார். அவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த காளையாக மதுரை குலமங்களத்தை சேர்ந்த திருப்பதி என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. அந்த காளையின் உரிமையாளருக்கு மொபட் பரிசு வழங்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடு
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் பலர் வந்தனர். அவர்கள் வாடிவாசலின் இருபுறமும் அமைக்கப்பட்டு இருந்த கம்பி வலைகளுக்கு பின்னால் நின்று கொண்டும், அங்குள்ள வீடுகளின் மொட்டைமாடி, ஜன்னல் போன்ற பகுதிகளில் நின்று கொண்டும் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத்மிஸ்ரா 15 தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார். அதுபோல், பல முக்கிய பிரமுகர்கள் பரிசுகளை விழா குழுவினரிடம் கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், உத்தமபாளையம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குமரன், முருகேசன், பண்ணைப்புரம் பேரூராட்சி தலைவர் லட்சுமி இளங்கோவன், முத்துலாபுரம் அரசு முதல்நிலை ஒப்பந்ததாரர் பரமானந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.