கடந்த 10 மாதங்களில் ரெயிலில் கடத்திய 874 கிலோ கஞ்சா பறிமுதல்


கடந்த 10 மாதங்களில் ரெயிலில் கடத்திய 874 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 7 Nov 2022 1:00 AM IST (Updated: 7 Nov 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த 10 மாதங்களில் ரெயிலில் கடத்திய 874 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை 51 பேர் கைதாகி உள்ளனர்.

சேலம்

சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த 10 மாதங்களில் ரெயிலில் கடத்திய 874 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை 51 பேர் கைதாகி உள்ளனர்.

ரெயிலில் சோதனை

தமிழகத்தில் கஞ்சா, பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சிலர் புகையிலை பொருட்களை ரெயிலில் கடத்தி ரகசியமாக விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் கஞ்சா, புகையிலை பொருட்களை கடத்தி செல்லும் நபர்களையும், அதை விற்பனை செய்யும் நபர்களையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து மாநில எல்லைப்பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து, கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தலை போலீசார் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக சேலம் ரெயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, ஓசூர், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய 5 ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயில்வே தனிப்படை போலீசார் தினமும் ஆந்திராவில் இருந்து வரும் ரெயில்களில் ஏறி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், கடந்த 10 மாதங்களில் மட்டும் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்பட்டதாக 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 874 கிலோ கஞ்சாவை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

51 பேர் கைது

பீகார், ஒடிசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் உள்பட இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய 57 பேரை ரெயில்வே போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். சேலம் உட்கோட்டத்தில் மிக அதிகபட்சமாக சேலம் ரெயில்வே போலீசில் மட்டும் 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 410 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 30 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கு அடுத்த இடத்தில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் 30 கஞ்சா வழக்குப்பதிவு செய்து 242 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் காட்பாடி ரெயில்வே போலீசில் 21 வழக்குகளில் 222 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 10 பேரை தேடி வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.


Next Story