பிளஸ்-1 தேர்வில் 88.74 சதவீதம் பேர் தேர்ச்சி
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 88.74 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகளே கூடுதலாக 11.48 சதவீத தேர்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர்:
தமிழகத்தில் 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 245 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 15 ஆயிரத்து 834 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 740 பேரும் என மொத்தம் 31 ஆயிரத்து 574 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள்.
இந்த நிலையில் ஜூன் 27-ந் தேதி பிளஸ்-1 தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி இன்று காலை 10 மணி அளவில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 146 மாணவர்களும், 14 ஆயிரத்து 874 மாணவிகளும் என மொத்தம் 28 ஆயிரத்து 20 பேர் தேர்ச்சி தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 88.74 சதவீத தேர்ச்சியாகும்.
கல்வி மாவட்டங்கள்
இதில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 68 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 912 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 5 ஆயிரத்து 986 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 88.22 சதவீத தேர்ச்சியாகும். இதேபோல் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 70 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 912 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 5 ஆயிரத்து 986 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 86.60 சதவீத தேர்ச்சி ஆகும்.
சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் 52 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 717 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 5 ஆயிரத்து 992 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 89.21 சதவீத தேர்ச்சியாகும். இதேபோல் வடலூர் கல்வி மாவட்டத்தில் 55 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 161 பேர் தேர்வு எழுதியதில் 6 ஆயிரத்து 528 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.16 சதவீத தேர்ச்சியாகும்.
மாணவிகள் அதிகம்
மேலும் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்கள் 83.02 சதவீதமும், மாணவிகள் 94.50 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 11.48 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முன்னதாக நேற்று காலை 10 மணி அளவில் அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவு மதிப்பெண் விவரங்களுடன் ஒட்டப்பட்டது. அதனை தற்போது பிளஸ்-2 படித்து வரும் மாணவ- மாணவிகள் தங்களுடைய பிளஸ்-1 மதிப்பெண் விவரங்களை பார்த்து அறிந்து கொண்டனர். மேலும் மாணவ- மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவு தெரிவிக்கப்பட்டது.