மின்சாரம் தாக்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி
மின்சாரம் தாக்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி
வல்லம்:
தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானான்.
8-ம் வகுப்பு மாணவன்
தஞ்சையை அடுத்து உள்ள நாகப்பஉடையான்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் கஜேந்திரன்(வயது 13). மாணவன் கஜேந்திரன், மருங்குளம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் கஜேந்திரன் தனது வீட்டுக்கு வந்தான்.
பின்னர் கஜேந்திரன் தனது வீட்டின் அருகே உறவினர் வைத்துள்ள பால் கடைக்கு சென்றான். அங்கு சென்ற கஜேந்திரன், அங்கு இருந்த மின்சார எர்த் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டான்.
மின்சாரம் தாக்கி பலி
அப்போது அவன் மீது மின்சாரம் தாக்கியதில் கஜேந்திரன் மயங்கி விழுந்தான். உடனடியாக அங்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மயங்கி கிடந்த கஜேந்திரனை பரிசோதனை செய்து பார்த்து விட்டு சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவன் கஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி 8-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.