9-ந்தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுகிறார்கள்
தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 9-ந்தேதி நடக்கிறது.
சென்னை,
தி.மு.க. உள்கட்சி தேர்தல் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் தி.மு.க. உள்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கிளை, ஒன்றியம், வட்டம், நகர பகுதிகளுக்கு தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து கடந்த வாரம் மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு விருப்பமனு பெறப்பட்டது. தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்படும் 72 மாவட்டங்களுக்கு மனுக்கள் பெறப்பட்டது. பெரும்பாலான மாவட்டங்களில் போட்டி இல்லாத நிலை இருந்தது. ஒருசில மாவட்டங்களுக்கு மட்டும் போட்டி நிலவியது.
72 மாவட்ட செயலாளர்கள் பட்டியல்
தற்போது 72 மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட செயலாளர்களை கட்சி தலைமை தேர்வு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து உள்கட்சி தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இனி தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பொதுக்குழுவில் நடக்க இருக்கிறது.
இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
துரைமுருகன் அறிவிப்பு
தி.மு.க. 15-வது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் அக்டோபர் 9-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த பொதுக்குழுவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்பாடுகள்
இந்த பொதுக்குழுவில் ஒருமனதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதேபோல், பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ்கள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.