கோபால்பட்டி அருகே நாய்கள் கடித்து குதறியதில் 9 ஆடுகள் சாவு


கோபால்பட்டி அருகே நாய்கள் கடித்து குதறியதில் 9 ஆடுகள் சாவு
x

கோபால்பட்டி அருகே நாய்கள் கடித்து குதறியதில் 9 ஆடுகள் உயிரிழந்தன.

திண்டுக்கல்

கோபால்பட்டி அருகே கணவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொரசினம்பட்டியை சேர்ந்தவர் செல்லையா (வயது 48). இவர், அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை செல்லையா வேலை தொடர்பாக தோட்டத்தில் இருந்து கோபால்பட்டிக்கு சென்றுவிட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் காலை 10 மணி அளவில் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்கு தோட்டத்து வீட்டின் முன்பு கட்டியிருந்த 11 ஆடுகள் ரத்தம் வழிந்த நிலையில் துடித்துக்கொண்டிருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லையாவின் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர்.

இதுகுறித்து வனத்துறை, கால்நடை துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கோபால்பட்டி அரசு கால்நடை மருத்துவர் முருகானந்தம் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த ஆடுகளை பரிசோதித்தார். அப்போது நாய்கள் கடித்து குதறியதில் ஆடுகள் காயமடைந்ததாக அவர் தெரிவித்தார். இதற்கிடையே சிறிதுநேரத்தில் 9 ஆடுகள் உயிரிழந்தன. 2 ஆடுகள் லேசான காயங்களுடன் தப்பின. பின்னர் உயிரிழந்த ஆடுகள், பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டன. அப்போது கணவாய்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரவீன்குமார், வனத்துறை அலுவலர் ஜெயராம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து கொரசினம்பட்டி கிராம மக்கள் கூறுகையில், கொரசினம்பட்டியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் செல்லும் பொதுமக்களை கடிப்பது மட்டுமின்றி, ஆடு, கோழி உள்ளிட்டவற்றையும் கடித்து குதறுகின்றன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story