கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 9 மாத பெண் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற கொடூர தாய்-மகனுக்கு தீவிர சிகிச்சை
ராயக்கோட்டை:
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 9 மாத பெண் குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற கொடூர தாய், தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். விஷம் கொடுக்கப்பட்ட அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கூலித்தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது போடம்பட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 27). கூலித்தொழிலாளி. இவருக்கும், ஞானமலர் (21) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு பிரபாஷ் என்ற 2½ வயது மகனும், ஆதிரா என்கிற 9 மாத பெண் குழந்தையும் இருந்தனர். மாதேஷ் தினமும் கூலி வேலைக்காக சென்று விடுவார். ஞானமலர் தனது குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்தார்.
கள்ளக்காதல்
இந்தநிலையில் ஞானமலருக்கும், அதே ஊரை சேர்ந்த தங்கராஜ் (28) என்ற விவசாயிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு சென்றதும், தனது கள்ளக்காதலன் தங்கராஜ் உடன் ஞானமலர் உல்லாசமாக இருந்து வந்தார். இது அரசல்புரசலாக ஊர் பொதுமக்களுக்கு தெரியவந்தது.
அவர்கள் இது பற்றி மாதேசிற்கு தெரிவித்தனர். தனது மனைவியின் நடத்தை பற்றி அறிந்த மாதேஷ், கடந்த 3-ந் தேதி மனைவி ஞானமலரை கண்டித்தார். மேலும் இனி கள்ளக்காதலை தொடரக்கூடாது என்று எச்சரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஞானமலர் இதுகுறித்து தனது கள்ளக்காதலன் தங்கராஜிடம் தெரிவித்தார்.
விஷம் கொடுத்தார்
மேலும் தனது குழந்தைகள் இருப்பதால் தன்னால் கள்ளக்காதலை தொடர முடியாது. எனவே அவர்களை கொன்று விடலாம் என்று ஞானமலர் கூறினார். இதையடுத்து தங்கராஜ் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி ஞானமலர் குழந்தைகள் பிரபாஷ், ஆதிரா ஆகிய 2 பேருக்கும் எலிபேஸ்ட்டை கொடுத்தார்.
இந்த நிலையில் குழந்தைகள் 2 பேரும் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர். அவர்கள் இது குறித்து ஞானமலரிடம் கேட்டனர். உடனே தான் சிக்கிக்கொள்வேன் என பயந்த ஞானமலர் தானும் வீட்டிற்குள் சென்று விஷம் குடித்தார்.
குழந்தை இறந்தது
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை ஆதிரா நேற்று காலை இறந்தது. இதுகுறித்து குழந்தையின் தந்தை மாதேஷ், ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மனைவிக்கும், தங்கராஜ் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், அதை தான் கண்டித்ததால், குழந்தைகளுக்கு தனது மனைவியே விஷம் கொடுத்ததாகவும், எனவே எனது மனைவி ஞானமலர், அவரது கள்ளக்காதலன் தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அதன் பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ஞானமலர், அவரது கள்ளக்காதலன் தங்கராஜ் ஆகிய 2 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது ஞானமலரும், அவரது மகன் பிரபாசும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தங்கராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பரபரப்பு
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற பெண் குழந்தையை கல் நெஞ்சம் படைத்த கொடூர தாயே விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் ராயக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.