9 புதிய வளர்ச்சி திட்ட பணிகள்
செம்மாண்டபட்டி ஊராட்சியில் 9 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
வெண்ணந்தூர்
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் செம்மாண்டபட்டி ஊராட்சியில் 9 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். அதன்படி செம்மாண்டப்பட்டி முதல் நடுப்பட்டி வரை ஏரிகரையில் தார்சாலை அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.75 லட்சத்தில் தேவேந்திரர் தெரு பெருமாள் கோவில் வீதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, ரூ.14.31 லட்சத்தில் தேவேந்திரர் தெருவில் அங்கன்வாடி மையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்திரா நகரில் வெள்ளைப்பிள்ளையார் கோவில் முதல் செம்மாண்டப்பட்டி வரை தார்சாலை அமைக்கும் பணி உள்பட மொத்தம் ரூ.2 கோடியே 20 லட்சத்து 44 ஆயிரத்தில் 9 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
பின்னர் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-
செம்மாண்டபட்டி கிராமத்திற்கு நான் ஆய்வு மேற்கொண்டபோது பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று தார்சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்தல், அங்கன்வாடி மையம், பொதுகழிப்பிடம் கட்டுதல், தெரு விளக்கு வசதி அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிடும் வகையில் அதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் ராசிபுரத்தில் இருந்து குருசாமிபாளையம், மொஞ்சனூர், ஓ.சவுதாபுரம், வெள்ளைபிள்ளையார் கோவில் வழியாக ராசாம்பாளையம் வரை புதிய வழித்தட அரசு பஸ்சை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் பயணம் செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எ.ஆர்.துரைசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஆதப்பன், கோட்ட மேலாளர் சுரேஷ்பாபு, கிளை மேலாளர் தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், வனிதா ஆகியோர் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.