மதுரையில் ரெயில் தீ விபத்தில் 9 பேர் கருகி சாவு:2-ம் கட்ட விசாரணைக்கு 15 அதிகாரிகளுக்கு அழைப்பு
மதுரை ரெயில் நிலைய தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவத்தில், 2-ம் கட்ட விசாரணைக்கு 15 அதிகாரிகள் அழைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை ரெயில் நிலைய தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவத்தில், 2-ம் கட்ட விசாரணைக்கு 15 அதிகாரிகள் அழைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு கமிஷனர் விசாரணை
மதுரை ரெயில் நிலையத்தில் கடந்த 26-ந் தேதி அதிகாலை நேரத்தில், லக்னோவில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கான சிறப்பு பெட்டியில், கியாஸ் சிலிண்டரில் டீ போடும் போது சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். இந்த ரெயில் பெட்டியில் லக்னோ பாசின் டிராவல்ஸ் நிறுவன பணியாளர்கள் 8 பேர் உள்பட 63 சுற்றுலா பயணிகள் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை எத்தனை பயணிகள் வந்தனர் என்ற முழு விவரம் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, சம்பவம் குறித்து, தென் மண்டலத்துக்கான ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி கடந்த 27-ந் தேதி, 28-ந் தேதிகளில் 2 நாட்களாக மதுரையில் விசாரணை நடத்தி வந்தார்.
திருவனந்தபுரம் மற்றும் மதுரை கோட்ட ரெயில்வே அலுவலர்கள், ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலர்கள், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். நாகர்கோவில், நெல்லை மற்றும் மதுரை ரெயில்வே வர்த்தக பிரிவு, மெக்கானிக்கல் பிரிவு, இயக்கப்பிரிவு அலுவலர்கள், ஸ்டேசன் மாஸ்டர்கள், ஷண்டிங் பணியாளர்கள், கேட்டரிங் ஆய்வாளர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், பிளாட்பார ஆய்வாளர்கள் ஆகியோரிடம் விளக்கம் கோரப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் சுற்றுலா குழுவினரின் சிலிண்டருக்கு சமையல் கியாஸ் நிரப்பப்பட்டது. அந்த சிலிண்டரில் கியாஸ் கசிவு இருந்துள்ளது. அதனை கவனிக்காத நிலையில் மதுரையில் ரெயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, டீ போடுவதற்காக நெருப்பை பற்றவைக்கும் போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது தெரியவந்திருக்கிறது.
15 பேருக்கு அழைப்பு
இதற்கிடையே, இந்த சுற்றுலா ரெயில் பெட்டி பெங்களூரு, மைசூரு மற்றும் திருவனந்தபுரம் சென்றுள்ளது. எனவே, அந்தந்த ரெயில் நிலையங்களை சேர்ந்த ரெயில்வே அலுவலர்கள், பணியாளர்களிடம் பாதுகாப்பு கமிஷனர் 2-ம் கட்ட விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது.
இதற்காக லக்னோவில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலர்கள், பாதுகாப்பு படை போலீசார், வர்த்தகப்பிரிவினர், இயக்கப்பிரிவினர் ஆகியோரிடமும், பெங்களூரு, மைசூரு கோட்டங்களில் அந்தந்த ரெயில் நிலையங்களில் பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், மெக்கானிக்கல், வர்த்தகம் மற்றும் இயக்கப்பிரிவினர் ஆகியோரிடம் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக சம்பந்தப்பட்ட ரெயில்வே துறை சார்ந்த நபர்கள் பெங்களூரு பாதுகாப்பு கமிஷனர் அலுவலகத்தில் நேரில் வந்து விளக்கம் அல்லது சாட்சியம் அளிக்க கடிதம் அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி, 2-ம் கட்ட விசாரணையில், ஆஜராகி விளக்கமளிக்க சுமார் 15 அதிகாரிகள், அலுவலர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணை முடிந்த பின்னர் ரெயில்வே துறையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு நடைமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளையும், விபத்துக்கான முழு காரணம், தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ரெயில்வே வாரியத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அந்த அறிக்கையானது ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு பின்னர் ரெயில்வே அமைச்சகம் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது நடைமுறையாகும்.