9½ பவுன் நகைகள்-பணம் திருட்டு
9½ பவுன் நகைகள்-பணம் திருட்டு
திருவாரூர்:
திருவாரூர் வடக்கு சேத்தி கிராம நிர்வாக அலுவலராக சக்திவேல் பணியாற்றி வருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், தற்போது திருவாரூர் மாவட்டம் காட்டூர் முதலியார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சக்திவேல் ஊருக்கு சென்றதால் அவருடைய வீடு கடந்த ஒரு வார காலமாக பூட்டியிருந்தது. கடந்த 2-ந்தேதி சக்திவேல் ஊருக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 9½ பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சக்திவேல் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.