ஓய்வு பெற்ற வருமான வரித்துறை ஊழியர் வீட்டில் 9 பவுன் நகை-1 கிலோ வெள்ளி திருட்டு
ஓய்வு பெற்ற வருமான வரித்துறை ஊழியர் வீட்டில் 9 பவுன் நகை-1 கிலோ வெள்ளி திருட்டு
ஓய்வு பெற்ற வருமான வரித்துறை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை மற்றும்1 கிலோ வெள்ளிப்பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வீட்டின் பூட்டு உடைப்பு
தஞ்சை அழகம்மாள் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 68). வருமான வரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றிருந்தார். சம்பவத்தன்று இவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் கண்ணனிடம் செல்போனில் தெரிவித்தனர்.
அதன் பேரில் வீட்டிற்கு வந்து பார்த்த கண்ணன் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணி மணிகள் சிதறி கிடந்தன.
9 பவுன் நகை- வெள்ளிப்பொருட்கள்
மேலும் அதில் இருந்த 9 பவுன் நகைகள் மற்றும் பூஜை அறையில் இருந்த வௌ்ளி குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு என சுமார் 1 கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்கள் காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கண்ணன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் சென்று விட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.