பிளஸ்-2 தேர்வில் 95.65 சதவீதம் பேர் தேர்ச்சி
குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
95.65 சதவீதம் தேர்ச்சி
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. குமரி மாவட்டத்தில் 10,959 மாணவர்களும், 11,916 மாணவிகளும் என மொத்தம் 22,875 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். அவர்களில் 10,148 மாணவர்களும், 11,731 மாணவிகளும் என மொத்தம் 21,879 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் மாணவர்கள் 92.60 சதவீதம் பேரும், மாணவிகள் 98.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் மாணவ- மாணவிகளின் சராசரி சதவீதம் 95.65 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 1,583 பேர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாகர்கோவில்-தக்கலை
நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 3,311 மாணவர்களும், 3904 மாணவிகளுமாக மொத்தம் 7,215 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 3,091 மாணவர்களும் (93.35 சதவீதம்), 3,839 மாணவிகளும் (98.35 சதவீதம்) என மொத்தம் 6,930 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 96.05 ஆகும்.
தக்கலை கல்வி மாவட்டத்தில் 3,104 மாணவர்களும், 3,312 மாணவிகளுமாக மொத்தம் 6,416 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 2,896 மாணவர்களும் (93 சதவீதம்), 3,261 மாணவிகளும் (98 சதவீதம்) என மொத்தம் 6,157 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 96 ஆகும்.
குழித்துறை-திருவட்டார்
குழித்துறை கல்வி மாவட்டத்தில் 2,040 மாணவர்களும், 2,168 மாணவிகளுமாக மொத்தம் 4,208 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 1,883 மாணவர்களும் (92 சதவீதம்), 2,141 மாணவிகளும் (99 சதவீதம்) என மொத்தம் 4,024 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 96 ஆகும்.
திருவட்டார் கல்வி மாவட்டத்தில் 2,504 மாணவர்களும், 2,532 மாணவிகளுமாக மொத்தம் 5,036 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 2,278 மாணவர்களும் (91 சதவீதம்), 2,490 மாணவிகளும் (98 சதவீதம்) என மொத்தம் 4,768 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 95 ஆகும்.
13-வது இடம்
4 கல்வி மாவட்டங்களிலும் மாணவர்களை விட, மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் குமரி மாவட்டம் 13-வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வின் போது 95.06 சதவீதம் தேர்ச்சி பெற்று 9-வது இடத்தை பிடித்து இருந்த நிலையில் தற்போது 13 -வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு அதிகரித்த போதிலும் மாநில அளவிலான ரேங்கில் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவ-மாணவிகள் ஏற்கனவே பள்ளிகளில் கொடுத்த உறுதிமொழி படிவத்தில் வழங்கியிருந்த செல்போன் எண்களுக்கு அந்தந்த மாணவ- மாணவிகளின் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் பள்ளிகளிலும், கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பள்ளிகள், கிளை நூலகங்களிலும் மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் தேர்வு முடிவுகளை காண திரண்டிருந்ததை காண முடிந்தது.