திருவண்ணாமலையில் 965 பள்ளி வாகனங்களை கலெக்டர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு


திருவண்ணாமலை, ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குட்பட்ட 169 பள்ளிகளை சேர்ந்த 965 வாகனங்களை கலெக்டர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை, ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குட்பட்ட 169 பள்ளிகளை சேர்ந்த 965 வாகனங்களை கலெக்டர் தலைமையில்வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வர பயன்படுத்தப்படும் வாகனங்களின் பராமரிப்புகள் குறித்து ஆண்டுதோறும் கோடைவிடுமுறையின்போது வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிரேக் செயல்பாடு, இருக்கை வசதி உள்பட பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.அதன்படி இந்த ஆண்டுக்கான திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நேற்று திருவண்ணாமலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

இதனையொட்டி திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 121 பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள பஸ்கள், மினி பஸ்கள், வேன்கள ஆயுதப்படை ைமதானத்துக்கு கொண்டு வரப்பட்டன.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களில் உள்ள முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, இருக்கைகள், ஆபத்து காலத்தில் அவசர வழி கதவு, கண்காணிப்பு கேமரா, வாகனத்தில் படிக்கட்டுகளின் உறுதி தன்மை போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தனியார் பள்ளி வேன் ஒன்றினை ஆய்வு செய்யும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் ஓட்டி பார்த்தார்.

இதில் 580 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில் சில பள்ளி வாகனங்களில் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது. அக்குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

செய்முறை விளக்கம்

தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறையினரால் பள்ளி வாகனங்களில் தீ பிடிக்கும் நிலை ஏற்பாடுமாயின் தீயினை கட்டுப்படுத்தப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்சு இயக்கும் பணியாளர்களால் முதலுதவி குறித்த நடவடிக்கைகள் குறித்த செய்முறை செய்து காணப்பிக்கப்பட்டது. ஆய்வின் போது திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி, தாசில்தார் சரளா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதில் பள்ளி வாகன ஓட்டுநர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், தனியார் பள்ளியை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

ஆரணி

இதேபோல் ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலக ஆளுகைக்கு உட்பட்ட ஆரணி, சேத்துப்பட்டு, போளூர் தாலுகா பகுதியில் செயல்படும் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், ஆரணி தாசில்தார் ரா. மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி, ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு 48 பள்ளிகளை சேர்ந்த 355 பஸ்கள், வேன்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் சுகுமார், ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு போக்குவரத்து) பூபாலன், செய்யாறு கல்வி மாவட்ட கல்வி அலுவலக அலுவலர் மலைவாசன், ஆரஞ்சு இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கு. சிவகுமார், பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி நிர்வாகி வெங்கடேசன், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக இயக்குனர் ரியாஸ் அஹமத், பால வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாலாஜி, ஏ.சி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளி பஸ் மேலாளர் அன்புசேகரன், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் என்.ராஜா, சேகர், பழனி, முனீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மொத்தம் 2 வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட 965 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.



Next Story