செங்கத்தில் 96.8 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக செங்கத்தில் 96.8 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. நேற்றும் மாவட்டத்தின் அனேக பகுதிகளில் பலத்த மழையும், மிதமான மழையும் பெய்தது.
திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் ஏரி, குளங்களில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குண்டும், குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் பெய்த மழையினால் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனை அப்பகுதி மக்கள் அகற்றினர். நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக செங்கத்தில் 96.8 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
போளூர்-65.8, திருவண்ணாமலை-50.5, கீழ்பென்னாத்தூர்-48, சேத்துப்பட்டு-17.6, வந்தவாசி-15, தண்டராம்பட்டு-9.2, வெம்பாக்கம்-7.6, செய்யாறு-2.