பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி. பல்புகள் கொள்முதல் செய்ததில் ரூ.97¼ லட்சம் ஊழல்; முன்னாள் உதவி இயக்குனர் உள்பட 13 பேர் மீது வழக்கு


பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி. பல்புகள் கொள்முதல் செய்ததில் ரூ.97¼ லட்சம் ஊழல்; முன்னாள் உதவி இயக்குனர் உள்பட 13 பேர் மீது வழக்கு
x

தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி. பல்புகள் கொள்முதல் செய்ததில் ரூ.97¼ லட்சம் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் உதவி இயக்குனர் உள்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி. பல்புகள் கொள்முதல் செய்ததில் ரூ.97¼ லட்சம் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் உதவி இயக்குனர் உள்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்.இ.டி. பல்பு கொள்முதல்

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வள மேலாண்மை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு கடந்த 2019-2020-ம் ஆண்டில் எல்.இ.டி. பல்புகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்தது. அதன்பேரில் தணிக்கை செய்ததில் அரசு நிதியில் முறைகேடு நடந்து இருப்பது கண்டறியப்பட்டது.

பேரூராட்சிகளுக்கு கம்பம் அருகே க.புதுப்பட்டியில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் இருந்து எல்.இ.டி. பல்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு பல்பு ரூ.9,987 என்ற விலைக்கு மொத்தம் 1,300 பல்புகள் கொள்முதல் செய்யப்பட்டன. இவை 36 வாட்ஸ் திறன் கொண்டவை. இந்த பல்புகள் சந்தை மதிப்பை விட அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.97¼ லட்சம் ஊழல்

அதாவது சந்தையில் ஒரு பல்பு ரூ.1,200 முதல் அதிகபட்சம் ரூ.2,500 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு பல்புக்கு உத்தேசமாக ரூ.7,487 அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து மோசடி நடந்துள்ளது. மேலும் இந்த பல்புகள் வாங்குவதற்கு டெண்டர் விதிகள் முறையாக பின்பற்றப்படாமலும், வெளிப்படைத்தன்மையின்றியும் இருந்துள்ளது. அனைத்து டெண்டர் அட்டவணைகளும் வெவ்வேறு பெயர்களில் ஒரே நபரிடம் இருந்து பெறப்பட்டவை என்ற தகவல்களும் கிடைத்துள்ளன.

இந்த பல்புகள் மொத்தம் ரூ.1 கோடியே 29 லட்சத்து 83 ஆயிரத்து 100-க்கு கொள்முதல் செய்யப்பட்டன. இதில், அப்போதைய பேரூராட்சி உதவி இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களால் அரசுக்கு ரூ.97 லட்சத்து 33 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

13 பேர் மீது வழக்கு

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் உத்தரவிட்டார். அதன்பேரில் இந்த கொள்முதலில் நடந்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக அப்போதைய தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, சம்பந்தப்பட்ட பேரூராட்சிகளின் முன்னாள் செயல் அலுவலர்களான பாலசுப்பிரமணியன் (ஆண்டிப்பட்டி), மகேஸ்வரன் (தென்கரை), செந்தில்குமார் (வீரபாண்டி), ஆண்டவர் (க.புதுப்பட்டி), பாலசுப்பிரமணி (உத்தமபாளையம்), ஜெயலட்சுமி (கோம்பை), மணிகண்டன் (மேலச்சொக்கநாதபுரம்), கார்த்திகேயன் (பூதிப்புரம்), கணேஷ் (தேவதானப்பட்டி), பசீர் அகமது (ஓடைப்பட்டி) மற்றும் ஒப்பந்ததாரர்களான க.புதுப்பட்டியை சேர்ந்த ஜமுனா, ரவி ஆகிய 13 பேர் மீதும் ஊழல் தடுப்புச்சட்டம் 1988 பிரிவு 7 மற்றும் 12 உள்பட 9 சட்டப்பிரிவுகளின் கீழ் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.


Related Tags :
Next Story