கடந்த ஆண்டில் 97 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 97 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 97 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
பேட்டி
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில், கடந்த ஆண்டில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட 97 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளது.
கஞ்சா விற்பனை
மேலும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இதுவரை 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 200 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.7,71,180 மதிப்புள்ள 77.12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்கில் மட்டும் 17 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்கில் கைதான 62 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
புகையிலை
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக 557 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.46,34,837 மதிப்புள்ள 7,963 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை விற்பனை செய்த 61 கடைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை மூலம் `சீல்' வைக்கப்பட்டு ரூ.3,45,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தின் மூலமாக மாவட்டத்தில் பெறப்பட்ட புகார் மனுக்களில் ரூ.28,00,000 மதிப்பிலான 185 செல்போன்கள் சைபர் கிரைம் காவல் துறையினர் மூலம் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆன் லைன் பணம் மோசடி
மேலும் ஆன்லைன் மூலம் பண மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் சைபர் குற்றவாளிகளின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.1,23,66,711 முடக்கப்பட்டு இதுவரை ரூ.15,68,245 மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 780 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமரை விஷ்ணு உடன் இருந்தார்.