விற்பனை செய்ய வைத்திருந்த 98 நெல்மூட்டைகள் பறிமுதல்
விற்பனை செய்ய வைத்திருந்த 98 நெல்மூட்டைகள் பறிமுதல்
கீழ்வேளூர் அருகே ஆந்தக்குடி ஊராட்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் விக்னேஷ்வரன். இவர், ஆந்தக்குடி - புதுபத்தூர் சாலையில் தனியார் வணிக வளாகம் நடத்தி வருகிறார். கடந்த 29-ந்தேதி கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் இந்த வணிக வளாகத்தை கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார், தேவூர் வருவாய் ஆய்வாளர் சசிகலா, கிராம நிர்வாக அலுவலர் செல்வேந்திரன் மற்றும் நாகை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு விவசாயிகளிடம் இருந்து வாங்கி வைத்து இருந்த நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக நெல் கொள்முதலுக்கு பயன்படுத்தப்படும் புதிய சணல் சாக்குகளை கொண்டு தரமற்ற ஈரப்பதம் அதிகம் உள்ள 98 நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தாசில்தார் ரமேஷ்குமார் நடத்திய விசாரணையில், விக்னேஷ்வரன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் புதிய சாக்குகளை கொண்டு நெல் மூட்டைகளை காக்கழனி, திருக்குவளை தாலுகா நீர்முலை, , திருவாய்மூர், திருவாரூர் மாவட்டம் வேப்பத்தாங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் 98 நெல் மூட்டைகளை பறிமுதல் செய்து, ஆந்தக்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் விக்னேஷ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.