தன்னார்வலர்களாக பணியாற்றுபவர்களில் 98 சதவீதம் பேர் பெண்கள்
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றுபவர்களில் 98 சதவீதம் பேர் பெண்கள் ஆவர் என்று திட்ட இயக்குனர் தெரிவித்தார்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா வடமதுரை ஒன்றியம் அய்யலூரில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இல்லம் தேடி கல்வி திட்ட இயக்குனர் இளம்பகவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டு இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில், தன்னார்வலர்களின் பணி மிகச் சிறப்பான ஒன்றாகும். அவர்கள் மிக சிறப்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களாக பணியாற்றுபவர்களில் 98 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். மாணவர்களிடம் அவர்கள் மிகவும் நெருங்கி பழகுவதன் மூலம் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக இருக்கின்றனர் என்றார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் விசாகன் பேசுகையில், இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டது. மேலும் பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் பள்ளிக்கு செல்லாமலேயே மாணவ-மாணவிகளிடையே கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அது தான் இந்த திட்டத்தின் வெற்றி ஆகும் என்றார். விழாவில் தொழிற்கல்வி இணை இயக்குனர் ஜெயக்குமார், முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், இல்லம் தேடி கல்வி திட்ட தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் மோசஸ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.