99 சதவீத அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு உள்ளனர்


99 சதவீத அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு உள்ளனர்
x

99 சதவீத அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டு உள்ளனர் என்று போளூர் பொதுக்கூட்டத்தில்முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

99 சதவீத அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டு உள்ளனர் என்று போளூர் பொதுக்கூட்டத்தில்முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் போளூர் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.

போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா, மாவட்ட துணை செயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், ஒன்றிய செயலாளர் ராகவன், ஸ்ரீதர், வீரபத்திரன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர்கள் பாண்டுரங்கன், ராதாகிருஷ்ணன், பஞ்சாட்சரம் ஆகியோர் வரவேற்றனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

40 தொகுதிகளிலும் வெற்றி

இங்கு நடைபெறும் கூட்டத்தை பார்த்தால் தி.மு.க.விற்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும். தற்போது தேர்தல் நடத்தினால் கூட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தான் பிடிப்போம். அதுவும் நமது தலைமையிலான கூட்டணி அமையும். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதை கொடுத்தாலும் வெற்றி பெற செய்து விடுவார். எந்தப்பணியாக இருந்தாலும் சீரும் சிறப்பாக செய்து முடித்து விடுவார்.

இன்று தமிழகத்தில் 48 லட்சம் குழந்தைகள் பசியாற உணவு அருந்தும் திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் தற்போது காலை உணவு வழங்கும் திட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் தி.மு.க. அரசு உணவு வழங்குகிறது.

எம்.ஜி.ஆர். உயிர் உள்ளவரை 13 ஆண்டுகள் தொடர்ந்து தி.மு.க. தலை தூக்க முடியவில்லை என்பது வரலாறு. சில பேர் அ.தி.மு.க.வை அசைத்து விடலாம் என்று கனவு காண்கின்றனர். இந்த இயக்கத்தை பொறுத்தவரை சில வெட்டுக்கிளிகள், சில வேடந்தாங்கல் பறவைகள், சில பட்டு பூச்சிகள் சில பருவகால சிட்டுகள் பிரிந்து சென்றாலும் அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைத்து விட முடியாது.

99 சதவீத உறுப்பினர்கள்

ஜெயலலிதா மனித உரிமை மிக்கவராக விளங்கிக் கொண்டிருந்தார். இவர் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டத்தை கொண்டு வந்தார். தொட்டில் குழந்தை திட்டத்தையும் கொண்டு வந்தார்.

ஏழை குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசியை விலை இல்லாமல் வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்து தந்தார். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் பல லட்சம் பெண்கள் பயன் பெற்று வந்தனர். தற்போது இந்த திட்டத்தை தி.மு.க.வினர் முடக்கி வைத்துள்ளனர்.

அ.தி.மு.க. இயக்கத்தில் 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ள தலைமையாக எடப்பாடி பழனிசாமி பவனி வந்துள்ளார். அடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். அதை யாராலும் மாற்றிக் காட்ட முடியாது.

என்னை தலைமை ஏற்க கூறினாா். நானும் எடப்பாடி பழனிசாமியும் ஒரே சமுதாயத்தை சார்ந்தவர்க்ள. எனவே ஒரு உறையில் 2 கத்தி இருக்க முடியாது. ஆதலால் ஒருவர் தான் தலைமை தாங்க முடியும். ஒருவர் தான் முதல்-அமைச்சராக வர முடியும்.

அ.தி.மு.க. என்னும் இயக்கத்தை எவராலும் சாய்த்து விட முடியாது என்பதை நாம் நிரூபித்து காட்டுவோம். நாற்பதும் நமதே என உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story