ஆட்டோ கவிழ்ந்து 9-ம் வகுப்பு மாணவி பலி
தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார். மேலும் அவருடைய தாய், சகோதரி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (வயது 37). இவர்களது மகள்கள் மஞ்சு (16), ஹரிஷா (13). மஞ்சு கோரம்பள்ளத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 11-ம் வகுப்பும், ஹரிஷா தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று முன்தினம் சுப்புலட்சுமி, மஞ்சு, ஹரிஷா, பக்கத்து வீட்டை சேர்ந்த சுதாப்பிரியா (21) ஆகியோர் கோரம்பள்ளத்தில் ஒரு விழாவுக்கு சென்றனர். விழா முடிந்து 4 பேரும் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
மில்லர்புரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, ஆட்டோ மீது பின்னால் வந்த லோடு ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்பட்டது. இதில் ஆட்டோவில் வந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து மாணவி ஹரிஷா மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோவில் மோதியதாக கூறப்பட்ட லோடு ஆட்டோவை தேடி வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது ஆட்டோ மீது லோடு ஆட்டோ எதுவும் மோதவில்லை என்பது தெரியவந்தது. மேலும் ஆட்டோ சாலையோரத்தில் உள்ள ஒரு மேடான பகுதி மீது ஏறியபோது நிலை தடுமாறி கவிழ்ந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.