செங்கற்கள் சரிந்து விழுந்து 1½ வயது குழந்தை சாவு
நொய்யல் அருகே செங்கற்கள் சரிந்து விழுந்து 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
வடமாநில குடும்பத்தினர்
நேபாள் சுமன்பூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்பாஸ்மா (வயது 32). இவரது மனைவி துக்கினிபாஸ்மா. இந்த தம்பதிக்கு ராஜ்பாஸ்மா (3) அனுராஜ் பாஸ்மா (1½) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் ரஞ்சித்பாஸ்மா தனது மனைவி மற்றும் மகன்களுடன் கரூர் மாவட்டம் நொய்யல் அருகே செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான செங்கல் தயாரிக்கும் சூலையில் கடந்த ஓராண்டாக வேலை பார்த்து வருகிறார். இதனால் ரஞ்சித்பாஸ்மாவின் குடும்பத்தினர் அந்த பகுதியில் கொட்டகை ஒன்றை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துக்கினி பாஸ்மா கொட்டகையின் அருகே தண்ணீர் தொட்டியில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். ரஞ்சித் பாஸ்மா குளியல் அறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ெகாட்டகையின் வெளியே ராஜ்பாஸ்மா, அனுராஜ் பாஸ்மா ஆகியோர் குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தனர்.
குழந்தை சாவு
அப்போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் அனுராஜ் பாஸ்மாவின் மீது விழுந்து அமுக்கியது. இதைக்கண்ட அங்கிருந்த குழந்தைகள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு ரஞ்சித் பாஸ்மா ஓடி வந்து அனுராஜ்பாஸ்மாவின் மீது கிடந்த செங்கற்களை எடுத்து விட்டு, பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்தான்.
இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுராஜ் பாஸ்மாவை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வழக்கு
இதையடுத்து அனுராஜ் பாஸ்மா உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரஞ்சித் பாஸ்மா கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.