5 தலைமுறைகளை கண்ட 102 வயது மூதாட்டி; குடும்பத்தினர், உறவினர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார்


தினத்தந்தி 19 Jun 2023 2:30 AM IST (Updated: 19 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே 5 தலைமுறைகளை கண்ட 102 வயது மூதாட்டி, தனது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடினார்.

திண்டுக்கல்

நத்தம் அருகே 5 தலைமுறைகளை கண்ட 102 வயது மூதாட்டி, தனது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடினார்.

100 வயதை கடந்த மூதாட்டி

பொதுவாக ஒருவர் தனது பிறந்தநாள் மற்றும் திருமண நாளை கொண்டாடும்போது, நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துவது நம்முடைய மரபு. பண்டைக்காலத்தில் 100 வயதை கடந்து வாழ்ந்தவர்கள் பலர் இருந்தனர்.

ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படி அல்ல. அற்ப ஆயுளிலேயே பலர் அஸ்தமித்து விடுகின்றனர். இன்றைய காலத்தில் 100 வயது வரை மனிதர்கள் வாழ்வது என்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 100 வயதை கடந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வருகிறார் என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் 85 பேர்

100 வயதை கடந்த அந்த மூதாட்டியின் பெயர் சீனியம்மாள். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவாடி கிராமத்தை சேர்ந்தவர். 1921-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி இவர் பிறந்தார். தற்போது சீனியம்மாளுக்கு 102 வயது ஆகிறது.

சீனியம்மாளின் கணவர் மீனாட்சிசுந்தரம். சித்த மருத்துவர். இவர், கடந்த 1997-ம் ஆண்டு இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு மொத்தம் 9 குழந்தைகள். அதில், 2 மகன்கள் ஏற்கனவே இறந்து விட்டனர்.

தற்போது 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். 23 பேரன், பேத்திகளும், 27 கொள்ளுப்பேரன், பேத்திகளும், 5-வது தலைமுறை வாரிசாக 4 எள்ளுப்பேரன், பேத்திகளும் என மொத்தம் 85 பேர் சீனியம்மாளின் குடும்ப உறுப்பினர்கள்.

பூர்ணாபிஷேக விழா

இந்தநிலையில் 100 வயதை கடந்த சீனியம்மாளுக்கு பூர்ணாபிஷேக விழா கொண்டாட அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று காலை வீட்டில் இருந்து மூதாட்டியை குடும்பத்தினர் ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு சீனியம்மாள் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து கோவிலின் அருகில் மருதம், நாவல் உள்ளிட்ட பலன் தரும் மரக்கன்றுகளை நட்டார்.

கேக் வெட்டி கொண்டாட்டம்

பின்னர் கோவிலில் இருந்து பட்டாசுகள் வெடித்தும், வாணவேடிக்கையுடனும் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் சேர்ந்து சீனியம்மாளை லிங்கவாடியில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு தனது குடும்பத்தினர் முன்னிலையில் கேக் வெட்டி சீனியம்மாள் தனது 102-வது பிறந்தநாளை மகிழ்ச்சி பொங்க கொண்டாடினார். பின்னர் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் கேக்கை ஊட்டி மகிழ்ந்தார்.

இதைத்தொடர்ந்து சீனியம்மாளிடம் கிராம மக்கள் பலர் ஆசி பெற்றனர். சீனியம்மாளுடன், அவரது குடும்பத்தினர் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். கிராம மக்களும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இயற்கை உணவு

சீனியம்மாள், இயற்கை உணவையே விரும்பி சாப்பிடுகிறார். இது தான் அவரது உடல் ஆரோக்கியத்துக்கு காரணமாக உள்ளது. தினமும் உணவில் கீரை வகைகளை சேர்த்து கொள்கிறார். நாட்டு சுண்டக்காய், காய்கறிகள் அவரது முக்கிய உணவு. தள்ளாடும் வயதிலும் தளராமல், நல்ல கண் பார்வையுடன், உடல்நல, மனநல ஆரோக்கியத்துடன் சீனியம்மாள் இருப்பதற்கு இயற்கை உணவே காரணம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Next Story