மாடியில் இருந்து தவறி விழுந்த 2 மாத பெண் குழந்தை
சூரிய ஒளிபடுவதற்கு வைத்திருந்த போது, மாடியில் இருந்து தவறி விழுந்த 2 மாத பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் ரோமன்மிஷன் சந்து பகுதியை சேரந்தவர் ஸ்டீபன். தனியார் நிறுவன ஊழியர். அவருடைய மனைவி இமாக்லேட்ரூபி. இவர்களுக்கு ஜெனோவா எனும் 2 மாத பெண் குழந்தை உள்ளது. பொதுவாக பச்சிளம் குழந்தையின் உடலில் சூரியஒளி படும்படி சிறிது நேரம் வைத்திருப்பது வழக்கம். அதன்படி நேற்று சூரியஒளி படும் வகையில், இமாக்லேட்ரூபி தனது கையில் குழந்தையை வைத்து கொண்டு மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கை தவறி குழந்தை மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டது.
இதையடுத்து இமாக்லேட்ரூபி பதறியடித்து கொண்டு சென்று குழந்தையை தூக்கினார். ஆனால் மாடியில் இருந்து விழுந்ததால் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.