கார் மோதி 2 வயது குழந்தை பலி
தஞ்சை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 வயது குழந்தை பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா மணக்கரம்பை பகுதியை சேர்ந்தவர் சின்னையன் (வயது 50). இவருடைய மனைவி சித்ராதேவி. தஞ்சை மேலவஸ்தாசாவடியில் நெல்சேமிப்பு கிடங்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியை பார்ப்பதற்காக மனைவி மற்றும் பேரன் சூர்யதேவபாண்டியனுடன் (2) சின்னையன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் நெல்சேமிப்பு கிடங்கை நோக்கி ஆட்டோவை திரும்ப முயன்றார். அப்போது புதுக்கோட்டை பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ முழுவதும் பலத்த சேதமடைந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சித்ராதேவி மற்றும் அவருடைய பேரன் ஆகிய 2 பேரும் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
குழந்தை பலி
உடனே அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை சூர்யதேவபாண்டியன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா். சித்ராதேவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து சின்னையன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.