தீக்காயம் அடைந்த 2½ வயது பெண் குழந்தை சாவு
குளித்தலை அருகே தீக்காயம் அடைந்த 2½ வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
குழந்தைக்கு தீக்காயம்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வெள்ளூர் சத்திரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). இவர் தற்போது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கோட்டமேட்டில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஷபிஷ்ணி (2½) என்ற மகள் இருந்தாள்.இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி காலையில் வீட்டின் முன்பு ஷபிஷ்ணியின் அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது பொருட்கள் எடுப்பதற்காக தாய் வீட்டினுள் சென்று விட்டார். அப்போது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த ஷபிஷ்ணி அடுப்பில் இருந்த பாத்திரத்தை எடுத்தாள்.. அப்போது எதிர்பாராத விதமாக ஷபிஷ்ணி மீது தீப்பிடித்து எரிந்தது.
சாவு
இதைக்கண்ட உறவினர்கள் தீக்காயம் அடைந்த ஷபிஷ்ணியை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஷபிஷ்ணி பரிதாபமாக இறந்தாள்.இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.