கிணற்றில் 3 வயது சிறுவன் பிணம்
ஸ்ரீமுஷ்ணம் அருகே 3 வயது சிறுவன் பிணமாக கிடந்தான். அவன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டானா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அருள்செல்வன். இவருடைய மனைவி கல்பனா. இவர்களுக்கு அபிநாத் (வயது 3) என்ற மகன் உள்ளான். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அபிநாத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் மாயமான அபிநாத்தை பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவனை பற்றி எந்த தகவலும் இல்லை. இதனால் பதறிய கல்பனா மாயமான தனது மகனை கண்டு பிடித்து தரக்கோரி ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், மாயமான அபிநாத்தை தேடி வந்தனர்.
கிணற்றில் பிணம்
இந்த நிலையில் அருள்செல்வன் வீட்டுக்கு அருகே உள்ள தரை கிணற்றில் நேற்று இரவு துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அருள்செல்வன் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கிணற்றை பார்த்தபோது, அபிநாத் பிணமாக மிதந்தான். இதைபார்த்து கதறி அழுத குடும்பத்தினர் இதுபற்றி ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அபிநாத் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தானா? அல்லது யாரேனும் அவனை அடித்துக் கொலை செய்து கிணற்றில் வீசிச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாயமான சிறுவன் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.