உளுந்தூர்பேட்டை அருகே நாளை பள்ளிக்கு செல்ல இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பலி தாய் கண் எதிரே பரிதாபம்
உளுந்தூர்பேட்டை அருகே நாளை பள்ளிக்கு செல்ல இருந்த நிலையில் 3 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
உளுந்தூர்பேட்டை,
தாய் கண் எதிரே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மின்சாரம் தாக்கி பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி ராசாத்தி. இவா்களுடைய மகன் சர்வேஸ்வரசுவாமி(வயது 3). சம்பவத்தன்று் ராசாத்தி தனது மகனை தான் வேலை செய்யும் வயலுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் தனது மகனை வயல்வெளி ஓரமாக அமரவைத்து விட்டு, விவசாய வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு அமர்ந்திருந்த சர்வேஸ்வர சுவாமி அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டான். மின்சாரம் தாக்கியதில் அந்த குழந்தை துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
தாய் கண் முன்னே...
தனது கண் எதிரே மின்சாரம் தாக்கி மகன் இறந்ததை கண்டு ராசாத்தி கதறி அழுதார். இதுபற்றி சக தொழிலாளர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், திருநாவலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின் ஊழியர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்துவிட்டு, குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்.கே.ஜி. வகுப்பில் சேர்ந்த சர்வேஸ்வரசுவாமி நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கு செல்ல இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி பலியானதால் அவனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.