ஓடும் பஸ்சில் ஜன்னல் வழியாக கீழே விழுந்த 4 வயது குழந்தை
நாகர்கோவில் கோட்டாரில் ஓடும் பஸ்சில் இருந்து ஜன்னல் வழியாக விழுந்த 4 வயது குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட குழந்தையை தாயார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டார்:
நாகர்கோவில் கோட்டாரில் ஓடும் பஸ்சில் இருந்து ஜன்னல் வழியாக விழுந்த 4 வயது குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட குழந்தையை தாயார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜன்னல் வழியாக விழுந்த குழந்தை
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை கன்னியாகுமரிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பஸ்சானது கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன் வந்த போது ஜன்னல் வழியாக குழந்தை ஒன்று சாலையில் எதிர்பாராதவிதமாக விழுந்தது.
அந்த சமயத்தில் குழந்தையின் சத்தம் கேட்டு சுதாரித்துக் கொண்ட டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார்.
ரத்தம் சொட்ட சொட்ட...
இதைத்தொடர்ந்து பஸ்சில் இருந்த குழந்தையின் தாயார் ஓடி வந்து குழந்தையை தூக்கினார். அப்போது குழந்தையின் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வடிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறியபடி கண்ணீர் மல்க குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார். ரத்தம் சொட்ட சொட்ட குழந்தையை தாயார் தூக்கிச் சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை ஜன்னல் ஓரத்தில் இருந்தபடி விளையாடியதால் கீழே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ேமலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.