6 வயது சிறுமி அடித்து கொலை
வெறையூர் அருகே 6 வயது மகளை அடித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
வாணாபுரம்
வெறையூர் அருகே 6 வயது மகளை அடித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
மகளை அடித்த தாய்
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே அரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன் (வயது 37), இவருடைய மனைவி சுகன்யா (28). இவர்களுடைய மகன் பிரசன்னதேவ் (8), மகள் ரித்திகா (6).
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பூபாலனுக்கும் சுகன்யாவிற்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சுகன்யா தனது மகள் ரித்திகாவை அடிக்கடி கடுமையாக தாக்கியுள்ளார்.
சம்பவத்தன்று ரித்திகாவை சுகன்யா கடுமையாக அடித்ததால் சிறுமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ரித்திகாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ரித்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.
தாய் கைது
இதனையடுத்து பூபாலன் தனது குழந்தையை அடித்து கொலை செய்த சுகன்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகன்யாவை கைது செய்தனர்.
மகளை தாய் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்பெண்ணையாற்றில் 3 குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதில் 3 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள், தான் பெற்ற மகளை அடித்து கொலை செய்த தாயால் அப்பகுதியில் மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.