கனமழையால் 60 அடி ஆழ விவசாய கிணறு பூமிக்குள் இறங்கியது
ஆம்பூர் அருகே கனமழை காரணமாக 60 அடி ஆழ விவசாய கிணறு பூமிக்குள் இறங்கியது.
ஆம்பூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் 60 அடி ஆழ கிணறு உள்ளது. இந்தநிலையில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக ஸ்ரீதர் நிலத்தில் உள்ள 60 அடி ஆழ கிணறு திடீரென பூமிக்குள் இறங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றின் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளை வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர். மேலும் கிணற்றின் அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கிணற்றில் மூழ்கும் நிலையில் உள்ளது. இதனால் தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி கிணற்றை முழுவதுமாக மூட தீயணைப்பு துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் வில்வநாதன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா ஆகியோர் கிணற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.